//பொருளாதார நெருக்கடியை முன்னிறுத்தி ‘ஜெனீவாவில்’ தப்பிக்க முனைகின்றதா சிறிலங்கா? சுதன்ராஜ்

பொருளாதார நெருக்கடியை முன்னிறுத்தி ‘ஜெனீவாவில்’ தப்பிக்க முனைகின்றதா சிறிலங்கா? சுதன்ராஜ்

PARIS, FRANCE, June 20, 2022 /EINPresswire.com/ --

ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபையின் 50வது கூட்டத் தொடர் கடந்;த திங்கட்கிழமை தொடங்கிவிட்டது. கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா இல்லாவிட்டாலும், சிறிலங்கா அரசு தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இக்கூட்டத் தொடரினை உள்ளடக்கியுள்ளதாவே தெரிகின்றது.

கூட்டத் தொடரின் தொடக்க நாளில் ஒலித்த சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசின் உரை, அதன் நிகழ்ச்சி நிரலை தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளது.

போர்குற்றங்களுக்கான சாட்சியங்களை திரட்டும் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அலுவலக பொறிமுறை, கடந்த ஏப்ரல் மாதம் செயற்படத் தொடங்கியுள்ளதோடு, எதிர்வரும் செப்ரெம்பரில் அதன் அறிக்கையினை சபையில் சமர்பிக்கவுள்ளது. தொடர்ந்து அடுத்த கட்டமாக பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழர் தரப்பில வலுவாக காணப்படுகின்றது. தவிர ஐ.நா மனித உரிமைச்சபையின் இந்நாள், முன்னாளர் ஆணையாளர்கள் உட்ப ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் பலரும் இந்நிலைப்பாட்டினையே முன்னர் வெளிப்படுத்தியிருந்தனர்.

இச்சூழலில்தான் வரும்முன் காப்போம் என்பது போல், செப்ரெம்பருக்கு முன்னராகவே, இக்கூட்டத்தொடரில் இருந்தே தன்னை தற்காத்துக் கொள்வதற்கான அல்லது தப்பித்துக் கொள்வதற்கான உத்திகளை சிறிலங்கா அரசு கையாளத் தொடங்கியுள்ளது. அதனையே அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசின் உரையும், சந்திப்புக்களும் வெளிக்காட்டி நிற்கின்றன.

குறிப்பாக பொறுப்புக்கூறலில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கான உத்தியாக, தான் சந்தித்துக் கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியினை முன்னிறுத்தி நகர்வுகளை ஜெனீவாவில் மேற்கொண்டுள்ளது.

2013-2015 காலப்பகுதியில் போர்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா கடும் நெருக்கடியினை ஜெனீவாவில் சந்தித்திருந்த வேளை, (நல்)ஆட்சி மாற்றம் ஊடாக, தன்னை சர்வதேச வெளியில் தற்காத்துக் கொண்டது. கூடவே போரின் வெற்றிநாயகர்களாக சிங்கள மக்களால் கொண்டாடப்ப்பட்டதும், தமிழ்மக்களால் இனப்படுகொலையாளிகளாக அடையாளங் காணப்பட்டவர்களுமான இராஜபக்ச தரப்பினரையும் மற்றும் இராணுவ, அரசியல் தலைவர்களையும் பாதுகாத்துக் கொண்டது.
2015ம் ஆண்டு ஆட்சிமாற்றத்தில் மேற்குலக தரப்புக்களும் ஓர் நிகழ்ச்சி நிரல் இருந்தது. அதனால்தான் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஜெனீவாவில் பாராட்டுப்பத்திரம் வாசித்திருந்ததோடு, காலநீடிப்பினை வழங்கியிருந்தனர். தமிழர்கள் தமக்கான நீதிக்காக போராடினர்.

அதே சூழல்தான் தற்போதும்.

ஆட்சிக்கதிரையில் இருந்த இராஜபக்சக்கள் மெதுமெதுவாக இறக்கப்பட்டாலும், ஜனாதிபதி கோத்தபாயவை மையப்படுத்தி அவருக்கு எதிராகவும், ஆட்சி மாற்றம் குறித்தும் குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆட்சிமாற்றம் சிறிலங்காவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்குமா என்றால் இல்லை என்பதே தெளிவான பதிலாக இருந்தாலும், 'காட்சி மாற்றமாக' ரணிலை பிரதமர் கதிரையில் இருத்தியதில் பல நன்மைகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இராஜபக்ச தரப்புக்கு மட்டுமல்ல சிங்கள பௌத்த பேரினவாத கொள்கை வகுப்பாளர்களுக்கும் இருந்துள்ளது என்பது புலனாகின்றது.

போரின் வெற்றி என்பது சிங்கள பௌத்தத்தின் வெற்றியாக கொண்டாடும் சிங்கள பேரினவாதம், அப்போரின் வெற்றி நாயகர்களை பாதுகாத்துக் கொள்ளவே விரும்பும். அதனைத்தான் 2015ம் ஆட்சிமாற்றத்தின் ஊடாக நுணுக்கமாக கையாண்டு கொண்டது. அதேபோல்தான், இன்று ரணிலை பிரதமர் கதிரைக்கு கொண்டு வந்ததன் ஊடாக, போரின் நாயகர்களை பாதுகாத்துக் கொள்ளப்படுகின்றார்கள் என்பதோடு, சர்வதேச வெளியில் சிறிலங்காவை தற்காத்துக் கொள்கின்ற நன்மையினையும் அடைய முனைகின்றனர்.

இந்த பின்புலத்தோடுதான், உள்நாட்டில் தாம் சந்திக்கின்ற பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள ஒருவிதமான அனுதாபத்தினை தமக்கு சாதகமாக மாற்ற முனைவதோடு, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான, தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்வதற்கான உத்தியாக பொருளாதார நெருக்கடியினை முன்வைக்கின்றது.

'அண்மைய வாரங்களில் சிறிலங்கா எதிர்கொள்ளும் பாரதூரமான சமூக மற்றும் பொருளாதார நிலைமையை சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது. தொற்றுநோய் உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளால் இந்த நிலைமை மோசமாகிவிட்டாலும், போராட்டங்களின் கவனம் பொருளாதார நிவாரணம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்திற்கான கோரிக்கைகளை உள்ளடக்கியது. இந்தச் சவால்களை அங்கீகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய முறையில் முன்னோக்கிச் செல்வதில், நமது மக்களின் அனைத்துப் பிரிவுகளின், குறிப்பாக, இளைஞர்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம்.' என ஐ.நா மனித உரிமைச்சபையின் கூட்டத் தொடரில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசின் உரை முதற்படியாக முன்வைத்திருந்தது.

' பொருளாதாரத்தின் முக்கியமான அம்சத்தில், நிலைமையை உறுதிப்படுத்தவும், நமது மக்களுக்கு அத்தியாவசியமானவற்றை வழங்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு திட்டத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் உறுதியான நடவடிக்கைகளை நாங்கள் உருவாக்குகிறோம். முன்னோக்கி நகர்வதில், உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் நாங்கள் உரையாடுகிறோம். நமது பொருளாதாரத்தை மீண்டும் நிலையான வளர்ச்சிப் பாதையில் வைப்பதற்கும், உணவு, உரம், எரிசக்தி மற்றும் மருந்துகள் போன்ற தேவைகளை வழங்குவதற்கும் ஒரு ஒத்திசைவான கட்டமைப்பை நாங்கள் ஒன்றிணைத்து வருகிறோம்.' என தொடர்ந்த ஜீ.எல்.பீரிசின் உரையானது ' ஐ.நாவின் 46/1 தீர்மானத்தின் மூலம் பரிந்துரைக்கப்படட ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் சாட்சிய சேகரிப்புப் பொறிமுறையினை நிராகரிப்பதாக வழமைபோல் தெரிவித்திருந்ததோடு, இப் பொறிமுறையானது சிறிலங்காவின் உள்ளக விசாரணைக்குத் தடையாகவுள்ளது எனவும் சாட்சிய சேகரிப்பு முறையானது வளங்களை விரயமாக்குவதோடு, பயனற்றது என தெரிவித்துருந்தது.

இதேவேளை மனித உரிமைகள் பேரவையின் தலைவர், அணிசேரா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், மற்றும் பிரேசிலின் நிரந்தரப் பிரதிநிதி ஆகியோருடனான சந்திப்புக்களில், சிறிலங்காவின் தற்போதைய சமூக-பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேச சமூகத்தின் அனுதாபம் மற்றும் புரிதலின் அவசியம் குறித்து வெளிவிவகார அமைச்சர் விளக்கினார் என்றும் தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க நாட்டிற்கு இடத்தின் அவசியத்தை வலியுறுத்தும் அதே வேளையில், கடமைகளை சமாளித்து முன்னேறுவதற்கான அரசியல் விருப்பத்தையும் உறுதியையும் சிறிலங்கா கொண்டுள்ளது எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார் என சிறிலங்கா அரச தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஐ.நா மனித உரிமைச்சபையின் யூன் மாத கூட்டத் தொடர் முக்கியத்துவம் உள்ள ஒன்றாக பலராலும் கருதப்படுவதில்லை. அதனால்தான் தமிழர் தரப்பின் சத்தமும் ஜெனீவா விடயத்தில் அமைதியாக காணப்படுவதாக கூறப்படுகின்றது. ஆனால் பொருளாதார நெருக்கடியின் அனுதாபத்தை முதலீடாக்கி, அதன் ஊடாக பொறுப்புக்கூறலை இல்லாது செய்கின்ற சிறிலங்காவின் குரல் சத்தமாகவே ஜெனீவாவில் ஒலித்துள்ளது.

சிறிலங்காவின் நெருக்கடி நிலை இன்றோ நாளையோ உடனடியாக தீரப்போவதல்ல. இன்னும் பல மாதங்கள் எடுக்கும் என்றே பொருளியல் நிபுணர்கள் கணித்துள்ளதோடு, திரைக்கு பின்னால் நடைபெறும் சர்வதேச சக்திகளின் கொடுக்கல்-வாங்கலில் சிறிலங்காவின் உறுதிப்பாட்டைப் பொறுத்தே நிலைமைகள் தெரியும் என கூறப்படுகின்றது.

அதாவது வரும் செப்ரெம்பர் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரின் போது சிறிலங்கா பொருளாதார நெருக்கடியிலேயே சிக்கியிருக்கும் என்பது புலப்படுகின்றது. அதனால்தான் இன்றைய யூன் கூட்டத் தொடரிலேயே தனது நிகழ்ச்சி நிரலை முனநகர்த்த சிறிலங்கா தொடங்கியுள்ளது.
இவ்விடயத்தில் தமிழர் தரப்பு எத்தகைய முனைப்பினை மேற்கொள்ள போகின்றது என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகின்து.

சிறிலங்கா எந்த பொருளாதார நெருக்கடியினை தனக்கு சாதகமான வகையில் சர்வதேச அனுதாபத்தை ஏற்படுத்த முனைகின்றதோ, அந்த பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணிகளில ஒன்றாகவிருக்கின்ற, சிறிலங்காவின் இராணுவச் செலவீனங்கள் என்ற விடயத்தினை தமிழர் தரப்பு வலுவாக முன்வைக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிக்கின்றது. இந்த இராணுவச் செலவீனங்கள் சிறிலங்காவின் பொருளாதாரத்தார நெருக்கடியோடு தொடர்புபட்டது மட்டுமன்றி, பொறுப்புக்கூறலுக்கான பாரிய மனித உரிமைமீறல்களிலும் தொடர்புபட்டதாக காணப்படுகின்றது.

சிறிலங்காவுக்கு உலக அமைப்புகளால் மட்டுமன்றி சர்வதேச நாடுகளாலும் வழங்கப்படுகின்ற பொருளாதார மீட்சிக்கான நிவாரண உதவிகள் என்பன, இராணுவச் செலவீனங்களின் மட்டுப்படுத்தலை உறுதிசெய்யும் முன்நிபந்தனையுடன் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்பதோடு, தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரை வெளியேற்றுவதற்கான ஓர் பொறிமுறையொன்று ஐ.நாவினால் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் நா.தமிழீழ அரசாங்கம் எதிர்பார்கின்றது.

இன்றைய யூன் கூட்டத்த தொடரில் ஒலிக்கத் தொடங்கியுள்ள ஜீ.எல்.பீரிசின் குரலானது, எதிர்வரும் செப்ரெம்பர் கூட்டத் தொடரில் பொறுப்புக்கூறலை நீக்கம் செய்யும் வரைக்கும் ஓங்கி ஒலிக்கும் என்பது தெளிவாகின்றது. ஒரு வகையில் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்துகின்ற உத்திகளில் ஒன்றாகும்.

இதனை எதிர்கொள்ள, தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவ வெளியேற்றத்துக்கான குரலை ஒங்கி ஒலிப்பதோடு, பொறுப்புக்கூறலுக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து என்ற குரலை தமிழர் தரப்பு எவ்வாறு ஒன்றுபட்டு ஒலிக்கப்ப போகின்றது என்பதுதான் இன்றைய கேள்வியாகவுள்ளது.

S. Suthanraj
+33 7 55 16 83 41
email us here
SS